×

ஈரோடு மாவட்டத்தில் 7.48 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

* நாளை மறுதினம் முதல் விநியோகம்

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் 7.48 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு நாளை மறுதினம்(10ம் தேதி) முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதற்கான டோக்கன் வழங்கும் பணிகள் நேற்று முதல் துவங்கப்பட்டு தீவிரமாக நடந்து வருகிறது.தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் தை பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பினை ரேஷன் கடைகள் மூலமாக வழங்கி வருகிறது. இதேபோல், நடப்பாண்டு பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக ரூ.1,000 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கிட என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும்போது மக்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க குடும்ப அட்டைதாரர்களுக்கு நேற்று முதல் டோக்கன் விநியோகம் செய்யும் பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஈரோடு மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களான 7.48 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி அந்தந்த ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக தீவிரமாக நடந்து வருகிறது.

மக்களுக்கு வழங்கப்படும் டோக்கனில் ‘தமிழ்நாடு அரசு கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை பொங்கல் பரிசு தொகுப்பு-2024’ என்ற தலைப்பில் கடையின் பெயர்,குடும்ப அட்டைதாரர் பெயர்,குடும்ப அட்டை எண், கிராமம்,பரிசு வழங்கப்படும் தேதி,நேரம் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த டோக்கன் விநியோகம் செய்யும் பணிகள் நாளை(9ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு அந்தந்த ரேஷன் கடைகள் மூலமாக நாளை மறுதினம்(10ம் தேதி) முதல் 14ம் தேதி வரை வழங்கப்பட உள்ளது.

இதற்காக அனைத்து ரேஷன் கடைகளிலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், மக்கள் பாதுகாப்பாக வந்து பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்று செல்ல ஏதுவாக மர தடுப்புகள் அமைக்கும் முன்னேற்பாடு பணிகளும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பினை தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிட தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்பேரில், ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு பகுதி வாரியாக நாளை(9ம் தேதி) முதல் டோக்கன் வழங்கப்படும்.டோக்கன் பெற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு வருகிற 10ம் தேதி(புதன்கிழமை) முதல் 14ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். இப்பரிசு தொகுப்பு பெறுவதில் புகார்கள் ஏதேனும் இருந்தால் 1967 மற்றும் 18004255901, 0424-2252052 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

The post ஈரோடு மாவட்டத்தில் 7.48 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு appeared first on Dinakaran.

Tags : Pongal ,Erode district ,Erode ,Dinakaran ,
× RELATED மாநகராட்சி பணியாளர்களுக்கு நீர் ஆகாரங்கள் வழங்கல்